நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் உயரம் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழலில் மாணவிகள் படிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கடந்த ஆண்டு முதல் முன்மாதிரி பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பள்ளியின் முன்பு செல்லும் சாலையின் உயர் அதிகரித்ததால் பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் நாளடைவில் குறைந்து மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை கட்டிடம் உள்ளிட்டவை வெளிப் புறமாகத் தெரியத் தொடங்கியுள்ளது. மேலும், இரவு நேரத்தில் மது அருந்துவோரின் கூடாரமாகவும் இந்த பள்ளி மாறி வருகிறது.
இது குறித்துப் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளி முன்மாதிரி பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகும் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவர் உயர் படுத்தவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், மாணவிகள் பாதுகாப்பு கருதி உடனடியாக பள்ளியின் சுற்றுச்சுவரை மாவட்ட நிர்வாகம் உயர்த்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








