ஜோலார்பேட்டை அரசு பள்ளி விழாவில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள், தரமற்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பள்ளி விடுதியிலேயே தங்கிப் படிக்கும் மாணவிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து பயிலும் மாணவிகள் என அனைவருக்கும் பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு அளிக்கப்படும் உணவு மிகவும் தரமற்றதாக இருக்கிறது என மாணவிகள் பல முறை குற்றம் சாட்டியும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் பள்ளியின் விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த சட்டமன்ற உறுப்பினர் தேவராஜை மாணவிகள் முற்றுகையிட்டு உணவு பிரச்னையை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அங்கு வழங்கப்படும் உணவை நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ தேவராஜ் பள்ளி மாணவிகளை சமாதானப்படுத்தி இனி வரும் காலங்களில் தரமான உணவு வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








