திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுதிப் ராய் பார்மன் தன் சொந்தக் கட்சியையே தாக்கிப் பேசியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதிப் ராய் பார்மன் திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினராவார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மாநிலத்தின் சிபிஎம்மை வீழ்த்தி பாஜகவை ஆட்சியிலமர்த்துவதற்கு பெரும்பங்காற்றியிருக்கிறார். வரும் 2023ல் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக தன் ஆதரவாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சுதிப் ராய் பார்மன் “ திரிபுராவின் அரசாங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. மாநிலத்தில் ஜனநாயகமே இல்லாமல் இருக்கிறது. ஜனநாயக மூச்சுக் காற்று இல்லாததால் மக்கள் மூச்சு திணறி வருகின்றனர். ஆளும் அரசானது மக்களின் நலனை நிறைவேற்ற வில்லை. எனவே மக்கள் அரசின் மேல் அதிருப்தியில் உள்ளனர்.அரசின் செயல்பாடுகளால் மக்கள் சலிப்புடன் இருக்கின்றனர். ” என்று தெரிவித்துள்ளார்.
சுதிப் ராய் பார்மன் தன் சொந்த கட்சியையே இவ்வாறு விமர்சித்திருப்பது பாஜகவில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சுதிப் ராய் பார்மன் கடந்த 2019ல் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்யா விடம் சுதிப் ராய் பார்மனின் சர்ச்சை பேச்சு பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது “அவரின் நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம். சரியான நேரத்தில் அவர் மீது நடவடிக்கையெடுக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.







