மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில்,…

நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.

நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில், சுபாஷினி என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பருவ கட்டணம் செலுத்தாததால், மாணவியை வகுப்பாசிரியர் வகுப்பின் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக்  கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தனியார் கல்லூரியின் தாளாளர், கல்லூரி முதல்வர், வகுப்பாசிரியர் உள்ளிட்ட மூவர் மீதும், நாகூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கல்லூரி தாளாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து உடைத்ததால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து நாகை டிஎஸ்பி சரவணன், தலைமையில் போலிசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மாணவ மாணவிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக வேளாங்கண்ணி – நாகை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.