ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள செக் போஸ்ட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே மூன்று பேர் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இருவருக்கு தலையில் பலத்த அடிபட்டு கீழே விழுந்தனர். இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் அரசு பேருந்து சக்கரத்தினுள் சிக்கிக்கொண்டார். பின்னர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பேருந்து மீது மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து உடனே தீப்பிடித்தது.
இதை பார்த்த பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் பயணிகளை கீழ இறக்கி காப்பாற்றினர். பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் தீ பற்றி எரிந்ததில் தலை முடி கருகியது. பேருந்தில் வந்த 41 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் தீயிலேயே கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.







