“ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் தவெகவினரின் செயலுக்குக் கடும் கண்டனம்” – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றிப் பணியாற்ற முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைச்சர் ஆனந்த் அவர்களின் காலில் கட்சி நிர்வாகிகள் விழுந்த காட்சிகளைப் படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டி, செல்போனைப் பறித்து வீடியோக்களை வலுக்கட்டாயமாக அழித்த தவெகவினரின் அராஜகச் செயல் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இதனைப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் அளவிற்குத் தவெக-வினருக்கு அதிகார மமதை தலைக்கேறியுள்ளதும்; காவல்துறையினர் கண்முன்னே இந்த அத்துமீறல் நடந்தபோதும், அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்திருப்பதும் முதலமைச்சர் விஜயின் தலைமையிலான ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு அப்பட்டமான சான்றாகும்.

“புதிய அரசியல்”, “ஜனநாயகம்” என்று பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், தனது கட்சியினரின் இத்தகைய பாசிச அணுகுமுறையைக் கண்டும் காணாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, செய்தியாளரை மிரட்டி அத்துமீறிய நபர்கள் மீது பாரபட்சமின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்வதோடு, அதனை வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றிப் பணியாற்ற முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உரிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.