கொள்முதல் விலையை உயர்த்தி தராததால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் நாளை முதல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை முதல் கால வரையற்ற பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஆவினுக்கு கொள்முதல் செய்யப்படும் பசும்பாலின் விலை லிட்டருக்கு 35 ரூபாயாக உள்ள நிலையில் அதிலிருந்து ஏழு ரூபாய் உயர்த்தி 42 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல எருமை பாலின் விலை தற்போது 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் அதிலிருந்து ஏழு ரூபாய் உயர்த்தி 51 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் பால்வளத் துறை அமைச்சர் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஆவினுக்கு தினசரி 27 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் இந்த அளவு படிப்படியாக குறையும் 5 நாட்களில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், “அரசு எங்களின் கோரிக்கையை ஏற்காததால் நாளை முதல் எங்களின் பாலை நாங்கள் அதிக விலை கொடுக்கும் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளோம். தனியார் நிறுவனங்களின் விலைக்கு நிகராக ஆவின் நிறுவனமும் எங்களிடம் பாலை கொள்முதல் செய்ய வேண்டும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை மிக குறைவாக உள்ளது எனவே அதனை உயர்த்தி தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அண்மைச் செய்தி : அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார துறை செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
அண்டை மாநிலமான கேரளாவில் பசும்பால் ஒரு லிட்டருக்கு 48 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல பால் உற்பத்தியாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்வதாக நேற்று அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.







