’பொன்னியின் செல்வன்’ ராஜ ராஜ சோழனின் கதை

பொன்னியின் செல்வன் என போற்றப்படும் ராஜ ராஜ சோழன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மதச்சார்பின்மைக்கு உதாரணமாக திகழ்ந்துள்ளார். அவரது 1037வது சதய நாள் விழா கொண்டாடப்படும் நிலையில் அந்த பேரரசனை பற்றி தற்போது…

பொன்னியின் செல்வன் என போற்றப்படும் ராஜ ராஜ சோழன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மதச்சார்பின்மைக்கு உதாரணமாக திகழ்ந்துள்ளார். அவரது 1037வது சதய நாள் விழா கொண்டாடப்படும் நிலையில் அந்த பேரரசனை பற்றி தற்போது பார்க்கலாம்.

சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல்லவர்களும் தமிழ்நாட்டை செம்மையாக ஆட்சி செய்தவர்கள். தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால சோழப்பேரரசில் வானளாவிய சாதனைகள் புரிந்தவர் பொன்னியின் செல்வன் என்கிற ராஜராஜ சோழன். இவர்களின் ஆட்சிப்பகுதிகள் தென் இந்தியாவைக் கடந்து உலகெங்கும் பல நாடுகளில் கொடி கட்டி பறந்தன.

சேர, பாண்டியர்கள் இருந்த போதிலும், வரலாற்றில் அதிகம் பேசப்பட்டவர்களாக சோழப்பேரரசு இருந்துள்ளது. முற்கால சோழர்களில் கோப்பெருஞ்சோழன், கல்லணையை கட்டிய கரிகாலன், பராந்தக சோழன் சிறப்பிடம் பெற்றவர்களாக இருந்தவர்கள். பிற்கால சோழப்பேரரசு விஜயாலய சோழரின் காலத்தில் மீண்டும் தழைத்தோங்கினாலும். வரலாற்றுப் பக்கங்களில் சோழப் பேரரசு அழியாத புகழை பெற்று சிகரம் தொட்டது பொன்னியின் செல்வன் என்கிற ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான்.

சோழ மன்னன் சுந்தர சோழன் – வானமா தேவிக்கு கி.பி. 947 ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளில் இரண்டாவது மகனாக பிறந்தார் ராஜ ராஜ சோழன். இவரின் அண்ணன் ஆதித்த கரிகாலன், மர்மமான முறையில் கொல்லப்பட்டதால், அடுத்த பட்டத்து அரசனாக உருவாக்கப்பட்டார் ராஜ ராஜன்.

அரசனாகும் காலம் வந்ததும் அரசனாக அரியணை ஏறவில்லை. தன்னுடைய சித்தப்பா உத்தம சோழனை அரசனாக ஆட்சி பொறுப்பேற்க வைத்தார். சித்தப்பாவை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த அருங்குணத்தை சோழ நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளும் வியந்து போற்றி பாராட்டியது. உத்தம சோழன் இறந்த பிறகு ராஜ ராஜ சோழன், கி.பி. 985ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றார். இராஜ ராஜனின் பட்டத்து அரசி உலக மகாதேவியார். ராஜ ராஜனின் ஆட்சி சிறப்பாக அமைய மதியூகியாக, வியூக வகுப்பாளராக செயல்பட்டார், அவரின் அக்கா குந்தவை நாச்சியார்.

சோழ சாம்ராஜ்யம் அதுவரை அடையாத உயரத்தை ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் அடைந்தது. அதனால் தான் ராஜ ராஜனின் காலத்தை “சோழர்களின் பொற்காலம்” என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக சேர, பாண்டிய நாட்டின் பகுதிகளை வென்றார். பிறகு குடகு நாட்டின் உதகை சென்று, சோழ நாட்டு தூதுவனை சிறைமீட்டு, உதயகிரி கோட்டையை தரைமட்டமாக்கினார். ராஜ ராஜ சோழன் கடல் கடந்து ஈழ நாட்டின் மீது போர் தொடுத்தார். ஈழ நாட்டில் கொடுமையான ஆட்சி செய்த சிங்கள மன்னனை அடக்கி, சோழர்களின் அரசை நிறுவினார். பின்னர் ஐந்தாம் மகிந்தனையும் வென்றார்.

ராஜராஜனின் வாளும், வேலும் பட்ட இடமெல்லாம் வெற்றி வெற்றி என்ற வீர முழக்கமே ஒலித்தன. கடல் கடந்து மாலத்தீவு சென்று, பெரும் போரிட்டு வெற்றி கண்டார் ராஜ ராஜன். இதுவே அவர் பங்கு கொண்ட கடைசிப் போராக அமைந்தது. ராஜ ராஜ சோழன் போர் நடத்தினாலும், மக்களுக்கு இன்னல் ஏதும் இருக்காது. இதனால், பிற நாட்டு மக்களிடையே ராஜ ராஜ சோழன், தங்கள் நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜ ராஜன் வலிமையான கடற்படையை வைத்திருந்தார் . மக்களின் நிலங்களை முறையாக அளந்து, நிலவரி வசூல் செய்தார். இன்றைய அரசுகளின் மக்கள் நல திட்டங்களை அன்றே ராஜ ராஜ சோழன் செயல்படுத்தினார். வர்த்தகம், பொருளாதாரம், இலக்கியம், கட்டடக்கலை, விவசாயம் என்று அனைத்திலும் அவரது ஆட்சி தடம் பதித்தது. அகிலமே வியக்கும் வகையில் , தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி தொழில் நுட்பத்திற்கெல்லாம் தமிழ்நாடு முன்னோடி என்பதை பறைசாற்றினான்.

சிவபெருமானுக்கு கோவில் கட்டியது போல, பெருமாளுக்கும் கோவில்கள் கட்டினார். சமண, புத்த விகாரங்களை சீரமைத்தார். இன்றைய மதச்சார்பின்மைக்கு, முன்னுதாரணமாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து சமயத்திற்கும் பொதுவான ஒரு மன்னனாக விளங்கினார் ராஜராஜ சோழன். 1,014 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் அரியாசனமிட்டு அமர்ந்துள்ளார்.

களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய வரலாற்று சிறப்புக்குரியவர் ராஜ ராஜ சோழன். ராஜ ராஜ சோழனுக்கு பின் அவரின் மகன் ராஜேந்திர சோழன் அரசனாக அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்தார். உலகின் பல நாடுகளில் அடுத்த நூற்றாண்டிலும் சோழர்களின் புலிக்கொடியை பறக்க வைத்தார் . கங்கை கொண்ட சோழபுரம் என்ற வெற்றி நகரை உருவாக்கினார். இந்தோனேசியா, கம்போடியா, சீனா, ஜாவா, கிரேக்கம் என திசை எட்டும் ராஜேந்திரனின் வசமாகி, சோழப்பேரரசை அன்றே உலக வல்லரசாக வைத்திருந்தார்.

பல ஆட்சியாளர்களின் சாதனைகள் எல்லாம் ஏடுகளில் மட்டுமே உள்ள நிலையில், ராஜ ராஜ சோழனின் ஆட்சியின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவர் கட்டிய பெரிய கோயிலும்,கல்வெட்டுகளும் இன்றும் சான்றாக உள்ளன.

– ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.