சொமாட்டோ ஊழியரை தாக்கி வழிப்பறி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

சென்னையில் சொமாட்டோ ஊழியரை வழிமறித்து பட்டாக் கத்தியால் தாக்கி மிரட்டி பிசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.…

சென்னையில் சொமாட்டோ ஊழியரை வழிமறித்து பட்டாக் கத்தியால் தாக்கி மிரட்டி
பிசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த பணம்,
செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள்
வெளியாகியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவண குமார் (20). இவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், பகுதி நேரமாக சொமாட்டோவில் டெலிவரி செய்யும் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 25ம் தேதி சரவணகுமார் தியாகராய நகரில் இருந்து முல்லை நகர் பகுதிக்கு அவரது இருசக்கர வாகனத்தில் ஆர்டர் பெற்ற பிசா மற்றும் பர்கரை டெலிவரி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.

சரவணகுமார் வியாசர்பாடி பகுதியில் பேருந்து நிறுத்ததில் ஓய்வு எடுக்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சரவண குமாரின் பாக்கெட்டில் இருந்து திருட முயற்சி செய்துள்ளார். அவர் விழித்துகொள்ளவே மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் சரவண குமாரை சராமாரியாக வெட்டி, அவர் வைத்து இருந்த பிசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 1000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சரவண குமார் வியாசர்பாடி காவல் நிலையத்தில் அளித்த
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி
பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்ட செங்குன்றம் பகுதியைச்
சேர்ந்த கரண் (எ) கரடி கரண் என்பவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கரண்
என்பவனிடம் இருந்து சரவண குமாரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அவனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கரண் (எ) கரடி கரண் வியாசர்பாடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பேருந்து நிறுத்ததில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் போது அவரை வெட்டக் கூடிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.