தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 380 கி.மீ மற்றும் காரைக்காலில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி நாளை இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும். தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று, 11 : 30 மணி நேரத்தில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே சுமார் 290 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு (இந்தியா) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 510 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி நாளை முற்பகலில் இலங்கைக் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் அடுத்து மூன்று மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
- பி.ஜேம்ஸ் லிசா