ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? அல்லது கூட்டணி கட்சிக்கு ஆதரவா? என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் 66 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த முடிவை இன்னும் பாஜக அறிவிக்கவில்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த தலைவர்கள் குழு கமலாலயத்துக்கு சென்று பாஜகவிடம் ஆதரவு கோரினர். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் பாஜகவிடம் ஆதரவு கேட்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த தனது முடிவை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.
தற்போது நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் அதே நேரத்தில் பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய கூட்டத்துக்குப் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







