தஞ்சாவூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இவை தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. இந்த சூழலில், தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் பேருந்தை விட்டு இறங்கி நடந்த சென்றிருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பெண்ணிற்கு லிஃப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பாப்பாநாடு அருகே இளம் பெண் ஒருவர் காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







