மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமான பணிகளை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றுள்ளார். இந்த இரண்டு நாள் பயணத்தில் சிவகங்கை, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மதுரை புது நத்தம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக கட்டபட்டு வரும் கலைஞர் நூலகம் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 8 தளங்களை உடையதாக இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
8 தளங்கள் கொண்ட கலைஞர் நூலகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கலைஞர் நினைவு நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடியும், தொழில் நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் ரூ.5 கோடியும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கட்டிடத்தின் பணிகளானது நடைபெற்று வரும் சூழலில், இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
முதலமைச்சருடன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







