எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவினர், தவெகவில் இணைந்த விவகாரம் – அதிமுக, தவெக இடையே சலசலப்பு!

குதிரைபேர செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது என எடப்பாடி கூறியதால் அதிமுக – தவெக இடையே வார்த்தை போர் முண்டது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வெற்றி பெற்று ராஜினாமா செய்து பின் மீண்டும் உங்கள் கட்சியில் சேர்ப்பவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார். இதனால் அதிமுக – தவெக இடையே வார்த்தை போர் முண்டது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

“2017க்கு பிறகு உங்கள்(அதிமுக) ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது அம்மாவின் அதிமுக கிடையாது. அது அம்மாவின் ஆட்சி கிடையாது. அம்மா இருந்தவரை நீட் கொண்டு வரவில்லை, சிஏஏ கொண்டு வரவில்லை. ஆனால் உங்களுடைய(எடப்பாடி) ஆட்சியில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக டெல்லியில் சரண்டர் ஆனீர்கள். அதனால் தான் எங்கள் முதல்வர் நீர்த்துப்போன ஆட்சி என்று உங்களை சொன்னார். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் சேர வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் முழுவதுமாக விலகியதால் தான் எம்ஜிஆரின் விசுவாசிகளும் அம்மாவின் விசுவாசிகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். உங்களுடைய குதிரைபேர வார்த்தை என்று சொல்வது தவறு. ராஜினாமா செய்ய அரசியல் சட்ட உரிமை படி அனைவருக்கும் உரிமை உள்ளது. அவையில் மாற்றுக் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்வது இயல்பு. அவையில் தேவை இல்லாமல் சில வார்த்தைகளை சொல்லக்கூடாது” என்று தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில்,

“எடப்பாடி பேசும் பொழுது மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார். மின்சார கட்டணம் எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. இது கூவத்தூர் இல்லை தானாக முன்வந்து ராஜினாமா செய்து எங்கள் கட்சியில் சேர்ந்து உள்ளார்கள். இதில் எந்த கூவத்தூர் நிகழ்வும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பேசுகையில்,

“45 நிமிடம் அவருக்கு தெரிந்த கருத்துக்களை அவருடைய ஆட்சியின் சாதனைகளை எடப்பாடி தெரிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி கடைசியாக சொன்ன சில செய்திகள் ஆளும் கட்சியினர் பேசுவதற்கு வழி வகுத்துள்ளது. இரண்டு(திமுக, அதிமுக) பேரும் சேர்ந்து கொண்டு பேசுவது எனக்கு தெரியும் என்றார்.

எ.வ.வேலு:

குதிரை பேர விவகாரத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து உள்ளது. நாங்கள் நடுநிலையாக நடந்து கொண்டுள்ளோம். அதுதான் எங்களது பாதுகாப்பு. நாங்கள் ஆண்ட கட்சி அவர்கள்(அதிமுக) ஆண்ட கட்சி அடுத்த முறை ஆளலாம் என்று திட்ட போட்டு இருக்கும் கட்சி.

ராஜ்மோகன்:

40 நிமிடம் எடப்பாடி பேசும் பொழுது எதிர் கருத்துக்கள் இருந்தாலும் கூட அவர்களுடைய கருத்துக்களை கேட்டோம். ஆக்கபூர்வமான ஆரோக்கியமான கருத்தை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி:

இரவு பகல் பாராமல் வேர்வையை சிந்தி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தோம். நான் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் தலைமை அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தொண்டர்களின் உழைப்பில் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இதனால் தான் கருத்தை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். நாங்களும் திமுகவும் எந்த காலத்திலும் ஒன்றாக சேர்ந்ததில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு செயல்படுகிறோம் என்று சபாநாயகர் கூறுவது தவறு.

சபாநாயகர்:

நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறீர்கள் என்று சொன்னதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. உள்னோக்கமும் கிடையாது என்றார்.

எடப்பாடி பழனிசாமி :

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவைக்கு புறம்பான வார்த்தைகளை தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.