பொறியியல் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு தகவல்!

பொறியியல் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகக் கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடலூர் தொகுதி காங்கிரஸ் எம்பி டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார்,

“பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க மத்திய அரசு மற்றும் AICTE பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AISHE அறிக்கையின்படி, 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 10,45,015 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து நாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா – 8.11 லட்சம்,

மூன்றாம் இடத்தில் ஆந்திரா – 6.56 லட்சம்,

தேசிய மாதிரி சர்வே (PLFS) தரவுகளின்படி, பட்டதாரிகளுக்கான தொழிலாளர் வேலைவாய்ப்பு விகிதம் 2019-20-ல் 50.6%-ஆக இருந்தது,

2023-24-ல் 57.5% ஆக உயர்ந்துள்ளது.

தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் (NATS) கீழ் 2025-26-இல் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி முடித்துள்ளனர். இதில் பயிற்சி பெற்ற 74% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. SWAYAM Plus தளம் மூலம் 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். மேலும் AICTE மற்றும் தேசிய தொழில் சேவை போர்டல் மூலம் வேலைவாய்ப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 மகளிர் விடுதி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாடத்திட்டக் சட்டகத்தின் கீழ் செய்முறைப் பயிற்சிகளுக்கு 50% வரைக் கூடுதல் மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.