தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று ஒரு சாராரும், திறக்கக் கூடாது என்று ஒரு சாராரும் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களும், ஆலைக்கு அருகில் உள்ள கிராம மக்களும், மீனவ மக்களும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 16 பேர் மனு அளிக்க வந்தோம். உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. 4 வருடம் ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்பு இல்லாமல் முடங்கியுள்ளோம்.
பலமுறை மனு கொடுத்தும் எந்த உதவியும் செய்யப்படவில்லை. நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆலையை திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்துள்ளனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என்று கூறினார்.