டேபிள் டென்னிஸ் போட்டியில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்த தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டுத்துறை விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த விருதுகளில் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது, டேபிள் டென்னிஸ் போட்டியில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவரான தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப் பதக்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சரத்கமல்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உள்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தற்போது உலகின் சிறந்த சதுரங்க வீரர்களில் ஒருவராக விளங்கும் பிரக்யானந்தாவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இளவேனில் வாளறிவன், கடந்த ஆண்டு நடைபெற்ற காதுகேளாருக்கான ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஜெர்லின் அனிகா ஆகியோருக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத்துறை விருதுகளை பெறுபவர்களின் பெயரையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. விருது பெறுபவர்களுக்கு வரும் 30ந்தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.