போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாக, நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கத் தடுப்புப் படைகளை அமைத்து கண்காணிப்பதாகக் கூறிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், முதலில் கண்காணிக்க வேண்டியது தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே என்பதைத் தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரைத் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, அவர்களுக்குப் பொறுப்புகளையும் வழங்கிவிட்டு, “போதையில்லாத தமிழகம்” என்ற பெயரில் மாரத்தான் ஓடுவதன் மூலம் போதைப்பொருளை ஒழித்துவிடலாம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயலாகும்.

எனவே, ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பாக, தனது கட்சியில் உள்ளவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் பரவியுள்ள போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.