மது விலக்குக்காக மாநிலம் தழுவிய போராட்டம்: அன்புமணி

முழு மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றும் தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு…

முழு மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றும் தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பாமக மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அன்புமணி, சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். ஆயிஷா போன்றவர்களின் உணர்வு பாராட்டத்தக்கது; ஆனால், போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி பொது நலனுக்காக எதையும் செய்யத் துணிந்த தொண்டர்கள் நிறைந்த இயக்கம் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு என்ற அவர், “அத்தகைய தொண்டர்கள் பாமகவுக்கு மிகவும் தேவையானவர்கள்; தீக்குளிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி தீரம் மிக்க தொண்டர்களை இழக்க விரும்பவில்லை. அதனால், பாமக தொண்டர்கள் இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், “பாமகவின் முதன்மை நோக்கங்களில் ஒன்று ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை பாமக அறிவிக்க உள்ளது. மதுவை ஒழித்து, மக்களைக் காக்க எந்த தியாகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.