நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில், 6 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்தாகினி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது கேதார்நாத் கோயில். ஜகத்குரு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட இந்த ஆலயம், நாட்டின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டில் 6 மாதங்கள் இந்த கோயில் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி இந்த ஆலயம் மூடப்பட்டது.
இதையடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று மீண்டும் ஆலயம் திறக்கப்பட்டது.
ஆலயம் திறக்கப்பட்டதன் முதல்நாளான இன்று, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவி கீதா தாமியுடன் இணைந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பை தனது அரசு அளிக்கும் என்று முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும், நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. மேலும், கேதார்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோவிட் நெகடிவ் சான்றிதழை கொண்டு வருவது கட்டாயமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் வாசல் இன்று திறக்கப்படுவதற்கு முன்பாக, பாரம்பரிய வழக்கப்படி வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இதையடுத்தே கோயில் நடை திறக்கப்பட்டது. ஆயிரத்து 500 கிலோ மலர்களைக் கொண்டு இன்று ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.








