சேலத்தில் காவலர் தாக்கியதில் மதுபோதையிலிருந்த விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கமளிக்கச் சேலம் சகர டி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று மாலை குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, விவசாயி முருகேசன் தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறும்போது, தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைப்பெற்றுவருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் போலீசார் தாக்கியதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கச் சேலம் சகர டி.ஐ.ஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.







