கொரோனா நிவாரண நிதி வழங்கியச் சிறுவன்: பதிலுக்கு முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

மதுரையைச் சேர்ந்த சிறுவன் தான் ஆசையாகச் சைக்கிள் வாங்க வைத்திருந்த சேமிப்பிலிருந்து கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி உள்ளார். இந்த செயலால் நெகிழ்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அச்சிறுவனுக்குச் சைக்கிள்…

மதுரையைச் சேர்ந்த சிறுவன் தான் ஆசையாகச் சைக்கிள் வாங்க வைத்திருந்த சேமிப்பிலிருந்து கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி உள்ளார். இந்த செயலால் நெகிழ்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அச்சிறுவனுக்குச் சைக்கிள் வாங்கி பரிசாக வழங்கினார்.

இயற்கை எப்போதும் மனிதத்தை சோதித்துத்தான் பார்க்கும். வரலாற்றில் பெறும் தொற்று ஏற்பட்ட காலத்தில் மனிதம்தான் எப்போதும் வென்றிருக்கிறது. இதுபோல் மதுரையைச் சேர்ந்த சிறுவன் செய்த சிறிய உதவி மனிதத்தின் சான்றாக அமைந்துள்ளது. மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் – வேப்பா தம்பதியின் மகன் ஹரிஷ் வர்மன். இவர் 2வது வகுப்புப் படிக்கிறார். இச்சிறுவனுக்குச் சைக்கிள் வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவு இருந்துள்ளது.

வீட்டின் பொருளாதாரச் சிக்கலைப் புரிந்துகொண்ட ஹரிஷ் வர்மன், தனக்குக் கொடுக்கப்படும் பாக்கெட் மணியை ( pocket money) சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பெறும் தொற்றால் அதிக மக்கள் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து செய்திகளில் அவர் பார்த்து வந்திருக்கிறார். இந்த செய்திகள் அந்த பிஞ்சு மனதில் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சைக்கிள் வாங்கும் கனவைவிட, கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பிலிருந்து பணம் வழங்குவது மிகவும் முக்கியம் என்று அச்சிறுவனின் மனதிற்கு தோன்றியிருக்கிறது. இதனால் தான் சேமித்து வைத்த தொகையிலிருந்து ஆயிரம் ரூபாயை, காசோலையாக எடுத்து கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியிருக்கிறார்.

இந்த தகவல் தெரிந்தவுடன் முதல்வர் ஸ்டாலின், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கொ. தளபதியை தொடர்பு கொண்டு அச்சிறுவனுக்குச் சைக்கிளை வாங்கிக்கொடுத்தார். மேலும் அச்சிறுவனுடன் அவர் தொலைப்பேசியில் உரையாடினார். அவர்களின் உரையாடல் பின்வருமாறு:

ஹரிஷ் வர்மன்: தாத்தா எப்படி இருக்கீங்க.

முதல்வர் : நான் நல்லா இருக்கேன். சைக்கிள் பிடிச்சுருக்கா

ஹரிஷ் வர்மன்: தாத்தா வாழ்த்துக்கள் தாத்தா ( முதல்வர் ஆனதுக்கு). சைக்கிள் ரொம்ப நல்லா இருக்கு தாத்தா.

முதல்வர்: நன்றி. கொரோனா பரவுகிறது. அதிகமாக சைக்கிளில் வெளியே சுற்றாதே. முகக்கவசம் அணிந்துகொள்.

இந்த உரையாடலைக் கேட்கும் அனைவரும், மகிழ்ச்சியில் கண்கலங்கிப் போவார்கள். உதவும் மனம் கொண்ட அச்சிறுவனையும், அதை மதித்து பாராட்டும் முதல்வரின் மனதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.