ஆந்திரப் பிரதேசத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி பகுதியில் உள்ளது ரூயா அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையாக்கப்பட்டு வருகிறது. இங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருவதற்குக் காலதாமதம் ஏற்பட்டதால் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. இதுதொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரி நாராயணன் கூறுகையில், ‘ ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றுவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே காலதாமதமானது. அதற்குள் எதிர்பாராத விதமாக 11 பேர் உயிரிழந்தனர்’ என்று கூறினார்.
ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆக்சிஜன் சிலிண்டர்களை மாற்றுவதற்கு 45 நிமிடங்கள் ஆனது என்று கூறுகின்றனர். இதுபோலவே ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 7 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர்.







