மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் – அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்” என்று வரும் செய்திகளும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகில் முதல் நாடாக வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மே 2-ம் தேதிக்கு பிறகு புதிய அரசு அமைவதற்கும் – தற்போது அதிகாரிகள் செயல்பாட்டிற்கும் இடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது என தெரிவித்துள்ள ஸ்டாலின், கொரோனா பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் அனைத்து அதிகாரிகளும் கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திட அனைவரும் ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் – அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கொரோனா தொற்று பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.