தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட சம்பவங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக எஸ்எஸ்ஐ சென்றதால் தனது மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டதாக பேசிய ஆடியோ வைரலான நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் பாதுகாப்புப் பணிக்காக அனைத்து போலீஸாரும் விடுமுறையின்றி பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டுவிட்டதாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்தானராஜ் வேதனையுடன் பேசிய ஆடியோ வைரலாகியது. இந்நிலையில், இச்சம்பவத்துக்கு டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்புள்ள சந்தான ராஜ், தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.








