திமுக பயங்கரவாதத்திற்கு எப்போதும் துணை போனதில்லை- அமைச்சர் துரைமுருகன்

திமுக பயங்கரவாதத்திற்கு எப்போதும் துணை போனதில்லை. எங்கள் கொள்கையும் அதுவல்ல என மத்திய இணை அமைச்சருக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள…

திமுக பயங்கரவாதத்திற்கு எப்போதும் துணை போனதில்லை. எங்கள் கொள்கையும் அதுவல்ல என மத்திய இணை அமைச்சருக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை மக்களோடு நின்று செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னை பகுதியில் விவசாயத்திற்காகவும் குடிநீர் காகவும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்படும் என அமைச்சர் கூறினார்.

மேல்பாடி பகுதியில் மேலும் ஒரு புதிய தடுப்பு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றொரு மேம்பாலம் ஒன்று கட்ட அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்,  ஓ.பன்னீர்செல்வம் துரைமுருகன் இரட்டைவேடம் போடுகிறார் என்ற விமர்சனம் குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நானாவது இரட்டை வேடம் போட்டிருக்கிறேன். அவர் பல வேடம் போட்டு இருக்கிறார். கலங்கி போய் அவர் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மதகுகள் சீர்  செய்யப்படாததால் தண்ணீர் வீணாகிறது என்ற கேள்விக்கு, 10 ஆண்டுகளாக மதகுகள் சரி செய்யப்படாததால் தான் கிருஷ்ணகிரியில் ஒரு மதகு உடைந்து தண்ணீர் வீணாகியது. பரம்பி குளத்தில் தண்ணீர் வீணாகியது. ஆனால் தற்போது அனைத்து அணைகளிலும் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

திமுக அரசு பயங்கரவாதத்திற்கு துணை போகிறது இதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் குற்றசாட்டை முன்வைத்துள்ளார் என்ற கேள்விக்கு, யாரோ அவர் விவரம் தெரியாத அமைச்சர். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை. எங்கள் கொள்கையும் அதுவல்ல என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.