பிரபல இயக்குநர் ராஜமவுலி, டெல்லி விமான நிலைய வாசலில் ஏகப்பட்ட தெருநாய்கள் சுற்றுவதாக புகார் கூறியுள்ளார்.
பிரபல பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, பாகுபலி படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். வெளிநாடுகளிலும் இவர் படங்களுக்கு வரவேற்பு உள்ளது. இவர் இப்போது ’ஆர் ஆர் ஆர்’ என்ற பீரியட் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவ்கன் உட்பட பலர் நடிக்கின்றனர்,
கொரோனா காரணமாக தடைபட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், மீண்டும் தொடங்க இருக்கிறது, இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய ராஜமவுலி, டெல்லி விமான நிலையத்தின் வாசலில் தெருநாய்கள் சுற்றி வருவதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூறியிருப்பதாவது: லுஃப்தான்ஸா விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தேன். கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்களை கொடுத் தார்கள். வந்திறங்கிய அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்தும், சுவரில் வைத்தும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.
அதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. படிவங்களை பூர்த்தி செய்ய மேஜைகள் வழங்குவது சாதாரண சேவைதான். அதோடு, வாயிலுக்கு வந்ததும் அங்கு ஏராளமான தெரு நாய்களை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தியா வரும் வெளிநாட்டுக்காரர்களுக்கு இது நிச்சயமாக நல்லவிதமான முதல் எண்ணத்தை கொடுக்காது என்பதால், இதை கவனியுங்கள். நன்றி.
இவ்வாறு கூறியிருந்தார்.
இதையடுத்து அவருக்கு பதில் அளித்துள்ள டெல்லி விமான நிலையம், ’தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி. இதுபோன்ற கருத்துகள் விமான நிலையத்தை மேம்படுத்த உதவும். படிவங்களை பூர்த்தி செய்ய மேஜைகள் ஏற்கனவே இருக்கின்றன. அதை அதிகப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.







