கேட்பாரற்ற நிலையில் வள்ளுவர் கோட்டம்; எ.வ.வேலு

கடந்த ஆட்சியாளர்கள் வள்ளுவர் கோட்டத்தை கேட்பாரற்ற நிலையில் வைத்திருந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும்…

கடந்த ஆட்சியாளர்கள் வள்ளுவர் கோட்டத்தை கேட்பாரற்ற நிலையில் வைத்திருந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வள்ளுவர் கோட்டம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது. தமிழர்களுக்கு அடையாளமே வள்ளுவர் தான் அவர் எந்த மதத்தையும் சாராதவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால், வள்ளுவர் கோட்டம் சீர் கெட்டு கிடக்கிறது எனவே அதை ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் தற்போது ஆய்வு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ஆனால் ஏனோ தெரியவில்லை கடந்த 10 ஆண்டு காலமாக கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் வள்ளுவர் கோட்டத்திற்கு எதையும் செய்யவில்லை. கேட்பாரற்ற நிலையில் தான் வள்ளுவர் கோட்டம் உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

அவர்களுக்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள செடிகள், மரங்கள் சீர் செய்யப்படாமல் உள்ளது. எனவே தோட்டக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த பகுதியில் உள்ள செடி, மரங்களை சீர்செய்து குடும்பத்துடன் வருபவர்கள் அமைதியாக உட்கார்ந்து விட்டு செல்லக்கூடிய வகையில் சீர் செய்யும் பணிகள் செய்யப்பப்பட உள்ளது என கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.