ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த அத்திகோயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளன. இங்கு உள்ள வனப்பகுதியில் யானை , புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மற்றும் மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள மான் மற்றும் காட்டுப்பன்றிகள் வெடி வைத்து வேட்டையாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மலை அடிவார பகுதியான அத்திகோயில் பகுதியில் சோலையப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் அபாயகரமான 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த நாட்டு வெடி குண்டுகள் விலங்குகளுக்கு தயாரிக்கப்பட்டதா அல்லது சமூக விரோத செயலுக்காக தயாரிக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
—-கோ. சிவசங்கரன்







