மாதவராவ் வெற்றி பெற்றால் அவரது மகள் திவ்யாராவ் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாதவராவ் கடந்த 11ம் தேதி காலமானார். இந்த நிலையில் இன்று மாதவராவ் இல்லத்திற்குச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “எனது நெருங்கிய நண்பர் மாதவராவ் மறைவு வேதனையைத் தருகிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். கொரோனா என்ற கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை எவையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
தடுப்பூசி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்ற தகவல் பரவுகிறது. அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருமாவளவன், “ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் வெற்றி பெறுவது உறுதி. மாதவராவ் வெற்றி பெற்று நடைபெறும் இடைத்தேர்தலில் தகுதியுடைய மாதவராவின் மகள் திவ்யாராவிற்கு காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார். நிச்சயம் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும், திமுக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.







