இலங்கையில் போர்க்காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தல்களை அமைதியாக நடத்தலாம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவு நாளும், அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நாளும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு தமிழ் அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் முன்னெடுத்தன. 
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அம்பாறை முதல் யாழ்ப்பாணம் வரை திலீபன் நினைவு பேரணி நடத்தப்பட்டது. திலீபனின் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி சுகாஷ் அரசியல் பேசியது சர்ச்சையானது.
இதையும் படியுங்கள் – திலீபனுக்கு நினைவஞ்சலி: இலங்கை தமிழ் எம்.பி திடீர் கைது
மக்கள் #புரட்சி வெடிக்கட்டும்!#அம்பாறை முதல் #யாழ்ப்பாணம் வரை தியாக தீபத்தின் நினைவுப் பேரணி ஆரம்பம்… pic.twitter.com/sIt1ou1gCK
— Kanagaratnam Sugash (@Sugashkanu) September 15, 2022
இதையடுத்து திலீபன் போன்ற மாவீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வேண்டாம் என்றும் அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என்றும் மாவீரர்களின் பெற்றோர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிவாஜிலிங்கம் வேண்டுகோள்
இதுமட்டுமின்றி, தற்போது அஞ்சலி கூட்டங்களை நடத்துபவர்கள் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்த போது எங்கே போனார்கள் என்று முன்னாள் தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது நினைவு தினம் கடைபிடிப்பவர்கள், கோத்தபய காலத்தில் , நினைவு தினத்தின் போது அமைதியாக இருந்தவர்கள் தான் என்றாலும் தற்போதைய நினைவஞ்சலி கூட்டங்களை வரவேற்பதாகவும் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் அறிவிப்பு
இந்த நிலையில் நினைவுதின அஞ்சலிக் கூட்டங்கள் தொடர்பாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன விளக்கம் அளித்துள்ளார். போர்க்காலங்களில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுடைய உறவினர்களும், இனத்தவர்களும் அமைதியாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது, மொழி, இன, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடித்ததாகவும், அது இனியும் தொடரக் கூடாது என்பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் இன, மத மோதல்களைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது என்றும் அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
யார் இந்த திலீபன்?
இலங்கை நல்லூரில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் திலீபன் என்று அழைக்கப்பட்ட ராசையா பார்த்திபன் , தமிழர்களுக்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார். உலக தமிழ் மக்களால் தியாக தீபம் என்று போற்றப்படும் திலீபன் , 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து, தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் காரணமாகவும், தமது கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெரும் கனவுடன் போராடிய அவர் அதே மாதம் 27 ஆம் தேதி உயிர்நீத்தார். 
திலீபனின் 5 அம்சக் கோரிக்கை
1987ல் இலங்கையில் இருந்த இந்திய அமைதிப் படையிடம் வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட மீள்குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், அவசர காலச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும், தமிழர் பிரதேசங்களில் காவல் நிலையங்களைத் திறப்பதைக் கைவிட வேண்டும் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடி உயிர்நீத்தார்.
-வெற்றிநிலா







