இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அமைச்சர்கள் 38 பேர் இன்று பதவியேற்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். சிவநேசதுரை சந்திரகாந்தன், கிராம வீதி அபிவிருத்தி இணை அமைச்சராகவும், சுரேன் ராகவன் உயர்கல்வித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றனர். காதர் மஸ்தான் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். சதாசிவம் வியாழேந்திரன் கைத்தொழில் இணை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் அதிபர் ரணில் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன முன்னிலையில் நடைபெற்றது. 
அதே நேரத்தில், ரணிலின் அமைச்சரவையில் இலங்கை சுதந்திரா கட்சி அரசில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருந்தது. ஆனால் அதையும் மீறி அக்கட்சியை சேர்ந்த லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார உள்ளிட்ட 4 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேன, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.







