வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு விழா நடத்த குழு: அரசாணைக்கு வேல்முருகன் வரவேற்பு

வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசின் அரசாணை வரவேற்கதக்கது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற…

வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசின் அரசாணை வரவேற்கதக்கது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் கூறியுள்ளதாவது: தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது. மெய்யியல் வகையிலும், அறிவியல் முறையிலும் புதிய படிநிலைகளைத் தொட்டுக் காட்டுவது ஆகும். அதனால் தான், ஆரியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் எதிரானது தமிழர் ஆன்மீகம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது முக்கியமானது. அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலார் சிந்தனைகள் அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல துறைகள் சார்ந்து விரிந்து நிற்கின்றன. ஆரியமும், இந்துத்துவாவும் தற்போது ஒன்றாக கைகோர்த்து, மனிதர்களிடையே மத ரீதியாக பிளவுபடுத்தி வரும் இச்சூழலில், வள்ளலார் சிந்தனைகள் மனிதகுலத்திற்கு முன் எப்போதையும்விட இப்போது தேவை.

இச்சூழலில், வள்ளலார் பெருமானாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த சிறப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. அதே நேரத்தில், வள்ளலாரின் பல துறைச் சிந்தனைகளை ஆய்வு செய்து, பரப்புவதற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் உயராய்வு மையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.