எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க வரும் 20ம் தேதி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், வேளாண் மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், பாஜக தரப்பில் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால், கூட்டதொடர் முழுவதும் எதிர்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் நின்றன.
எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தொடர்ந்து தக்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டணி கட்சி தலைவர்களிடமும், ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது.







