சோனியா 2004: ராகுல் 2024… சவாலே… சமாளி..!!

2004ல் அன்றைய அரசியல் சூழலை மிகச் சரியாக கையாண்டு காங்கிரஸிற்கு வெற்றியை தேடித் தந்து 10 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்தவர் சோனியா காந்தி. அந்த வழியில் ராகுல் காந்தி 2024ல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்…

2004ல் அன்றைய அரசியல் சூழலை மிகச் சரியாக கையாண்டு காங்கிரஸிற்கு வெற்றியை தேடித் தந்து 10 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்தவர் சோனியா காந்தி. அந்த வழியில் ராகுல் காந்தி 2024ல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு

காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுக்கு தலைவர், எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற தீவிர சிந்தனையில் மூழ்கிய பிரதமர் இந்திரா காந்தி. மருத்துவமனையில் இருந்து வந்த செய்தியால் மகிழ்ச்சியடைந்தார். புதிய தலைமுறையின் வருகையால், எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. அந்த நாள் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ம் தேதி, இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி -சோனியா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்த செய்தியால்,தோல்வியில் துவண்டிருந்த இந்திரா புதிய உத்வேகம் பிறந்துள்ளது என்றே குறிப்பிட்டதுடன் , உடனடியாக. அக்குழந்தைக்கு ராகுல் காந்தி என பெயரிட்டார்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு,1969 ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவி ரெட்டி தோல்வியடைய வியூகம் வகுத்த இந்திராகாந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடதகக்து.

இந்திராகாந்தி – பெரோஷ் காந்தி தம்பதியினர் மூத்த குழந்தையை ராகுல் என அழைத்தனர். ஆனால் இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு, மறைந்த தன் மனைவி கமலா என்ற பொருளில் ராஜிவ் என பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது. ராகுல் என்ற பெயர் கால் நூற்றாண்டு காலம் இந்திரா குடும்பத்தில் காத்திருந்தது போலும்.

என்ன தான் பாரம்பர்யம் மிக்க நேரு குடும்பத்தில் பிறந்தாலும், ராகுலும்,அவர் தங்கை பிரியங்காவும், தாய் சோனியாவால், விமான பைலட் குடும்பம் எப்படி இருக்குமோ அப்படிதான் வளர்க்கப்பட்டனர். 1981 ஆம் ஆண்டு வரை ராஜிவ் காந்தி பைலட்டாக தான் இருந்தார். அதிக செழுமை எல்லாம் பாட்டி இந்திரா, குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் போது மட்டும் தான். டெல்லியின் கூலும்போ பள்ளி, டேராடூன் டூன் பள்ளி , இந்திரா படுகொலைக்கு பிறகு வீட்டிற்கு ஆசிரியர் வருகை, டெல்லி ஸ்டீபன் கல்லூரி, அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார்.

ராகுலுக்கு 14 வயதாகும் போது பாட்டி இந்திரா வும் , 21 வயதாகும் போது தந்தையும் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் உள்ளூர் முதல் உலகில் எங்கு சென்றாலும் காவல்துறை அனுமதியுடனே வெளியே செல்ல வேண்டியதால் பதின்ம வயது வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக ரவுல் வின்சி எனும் புனைப்பெயரில் படித்தார். இதையும் அரசியல் எதிரிகள் விமர்சிக்கின்றனர். அமெரிக்காவில் சிலகாலம் மேலாண்மை பிரிவிலும், பிறகு இந்தியாவில் மும்பையிலும் பணிபுரிந்தார். எ ங்கும் தன் குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை.

மாமியார் இந்திரா, கணவர் ராஜிவை பறிகொடுத்த சோனியா அரசியல் என்றால் வேண்டாம் என்று கை எடுத்து கும்பிட்டு விடுவார். 1996 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த சோனியா அரசியல் பிரவேசம் செய்தார். அப்போது பிரியங்கா அன்னைக்கு உதவினார். 2000 ம் ஆண்டில் இருந்து ராகுலும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தார். 2004 , 2009, 2014 தேர்தல்களில் தந்தை ராஜிவ் காந்தி வென்ற உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இருந்து எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிரதமராக எம்.பிக்கள் ஆதரவளித்தனர். . ஆனால் பாஜக தந்த அழுத்தத்தால், குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம், சோனியா வின் குடியுரிமை பற்றி கேள்விகள் எழுப்பினார். சர்ச்சைகளில் வெல்வதை சோனியா விரும்பவில்லை. அடுத்து வந்த தேர்தலிலும் சோனியா, ராகுல் என இருவரும் பிரதமர் பதவியை ஏற்க முனையவில்லை.

2004 முதல் 2014 வரை பொருளாதார மேதை மன்மோகன் சிங் ஐ பிரதமராக்கி மாண்பு சேர்த்தனர். சோனியா வும், ராகுலும் கூட்டணி ஆட்சியின் பாதுகாவலர்களாக தளபதிகளாக செயல்பட்டனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டும் அமைச்சரவையில் சேர மறுத்து விட்டார் ராகுல். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பொது செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். நாகரீக அரசியலை விரும்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரம் மூலம் ஆட்சி கவிழ்ப்பை ஊக்குவிக்க மறுத்து விட்டார். அதிகமாக ஆவேசமாக பேச மாட்டார். அமைச்சர் பொறுப்பில் புதியவர்களுக்கு வழி விடுங்கள் என்று பலமுறை மூத்த தலைவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

2009 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து  21 எம்.பிக்களை காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணம் ராகுலின் திட்டமிட்ட செயல்பாடு என கூறப்பட்டது. கட்சியினர் அதை தக்க வைத்துக் கொள்ள வில்லை என்பது இவரது வருத்தம். கட்சியில் முழுமையான மாற்றத்தை விரும்புகிறார் ராகுல், இந்திரா, ராஜிவ் மாதிரி அதிரடி இல்லை. ஆனால் சாதுர்யமாக முப்பாட்டன். தாத்தா பண்டித ஜவஹர்லால் நேரு மாதிரி மீண்டும், அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்சியாக காங்கிரஸை கட்டமைக்க விரும்புகிறார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி பாஜக ஆட்சி வந்தது. மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் பாஜக வின் குற்றச்சாட்டு குறித்து அமைதி காத்தனர். ஆனால் ராகுல் காந்தி மட்டுமே நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தோலுரித்து தக்க ஆதாரங்களுடன் பேசுகிறார். முன்பு பப்பு, யுவராஜா என கிண்டல் செய்த பாஜக வினர், இப்போது ராகுலை எதிர் கொள்வது எப்படி என அதிக முயற்சி செய்கின்றனர் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019 தேர்தலில் , பாஜக வின் ஸ்மிருதி இராணியிடம் அமேதி தொகுதியில் தோற்றாலும், கேரளா வின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி யானார். 2017 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 2019 தேர்தலில் கட்சி மீண்டும் தோல்வியை தழுவியது. தோல்விக்கு ஒப்புக் கொண்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ரஃபேல் உள்ளிட்ட பல ஊழல்கள் குறித்து நான் மட்டுமே பேசினேன். தலைவர்கள் யாரும் பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பேசவில்லை. நான் தனி ஒருவனாக போராடினேன். எனக்கு தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று வெளிப்படையாக நொந்து கொண்டார். நான் கட்சிக்கு உழைப்பேன். இனி தலைவர் பதவி வேண்டாம், பதவியில்லாமல் உழைக்கிறேன் என்று அறிவித்தார்.

பீகார், மகாராட்டிர மாநிலங்களில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவித்த ராகுல் அதற்காக கட்சியின் மூத்த தலைவர்களிடம் கடவுச்சொற்களையும் வாங்கி கொண்டார். பாரத் ஜோடோ ஒற்றுமை நடை பயணம் மூலம் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் வரை சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற வார்த்தையை வைத்து, சமுதாயத்தை. இழிவுபடுத்தி விட்டார் என்ற வழக்கில், ராகுல் காந்தி யின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தில் சந்திப்பேன் என்று கூறி விட்டார். ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு கேள்விக் குறியாக இருப்பது தனிக் கதை.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய மாநில தலைவர்களை முன்னிலை படுத்தி வெற்றி கண்டார். பெரும் சவாலாக பார்க்கப்படும் 2024 மக்களவை தேர்தலை , பாஜகவுக்கு எதிரான கட்சிகளை, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட வைத்து மீண்டும் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய சத்தமின்றி, யுத்தமின்றி செயல்பட்டு வருகிறார் ராகுல் காந்தி. 2004 மக்களவை தேர்தல் போல் 2024 தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா பார்க்கலாம்.

– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.