சென்னையில் ஒரே ஒரு சுரங்கப்பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியுள்ளது! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளில் ஒரே ஒரு சுரங்கப்பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு…

சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளில் ஒரே ஒரு சுரங்கப்பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவடங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கிண்டி கத்திப்பாரா சப்வேயில் மழைநீரானது சூழ்ந்துள்ளது. சுரங்கப்பாதையில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால் கார், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கத்திரபாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு வாகனங்களை ஓட்டுகின்றனர். அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன.

இந்நிலையில் வியாசர்பாடி கணேசபுரம் பகுதி சுரங்கப்பாதையில் உள்ள மழைநீர் அகற்றும் பணி நிறைவடைந்த நிலையில், வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அங்கு நேரில் ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சபீரன் ஆகியோர் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் சென்னையில் உள்ளன. அவற்றில் ஒரே ஒரு சுரங்க பாதையில் மட்டும் தான் தண்ணீர் உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் மேம்பாலம் வரவுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மழைப்பொழிவு தொடர்ச்சியாக இருந்த காரணத்தினால் ஒரு சில இடங்களில் மழை நீர் அகற்றம் தாமதம் ஏற்பட்டது. மின் மோட்டார் அனைத்தும் சென்னை மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன. பல்வேறு துறை ஊழியர்களை வைத்து மழைக்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.