சொத்துக்காக பெற்ற மகனே தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான்(77). இவரது மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இருந்த போதும் தனி ஆளாய் நின்று தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணம் செய்து தனித்தனியாக சொத்துகளை பிரித்து கொடுத்துள்ளார். தான் சுயமாக சேர்த்த பணத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது மகன் மதியழகன் தன் பெயருக்கு நிலத்தை எழுதி வைக்க வற்புறுத்தி வந்துள்ளார். இதனை தந்தை மருத்ததால் அவரை அடித்து துன்புறித்தியுள்ளார் மதியழகன்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பும் அவருக்கு சாதகமாக வந்தது. இதை தொடர்ந்து வீட்டில் அவர் வைத்திருந்த நிலப்பட்டாவை, அவருக்கு தெரியாமல் திருடி சென்று. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். தந்தை நிலப்பட்டாவை தர வேண்டும் என கேட்டதால், மகன் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அஞ்சான் தற்போது அவரது மகள்கள் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரை சந்தித்து அஞ்சான் புகார் மனு அளித்துள்ளார். அதில், சொத்தை அபகரிப்பதற்காக பெற்ற மகனே தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், வீட்டில் இருந்த நிலப்பட்டாவை திருடி அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது மகனிடம் இருந்து தமக்கு உயிர் பாதுகாப்பு அளித்து, திருடிச் சென்ற நிலப்பட்டாவை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து நாகை துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.







