திட்டங்களை உருவாக்குவதற்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும்: முதலமைச்சர்

புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில்…

புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள் உள்ளிட்டவை குறித்த துறைவாரியான ஆய்வுகள் பற்றி முதலமைச்சரிடம் விளக்கினார்.


இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய மாநிலம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை என தெரிவித்தார். மாநில அரசின் புதிய திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து விட்டதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திட்டங்களை உருவாக்குவதற்கும் – அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும் . நிதி நெருக்கடியை கருத்தில்கொண்டு, அநாவசியச் செலவுகளைக் குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை என்றும், சுற்றுலா – சிறுகுறு தொழில்கள் – கைவினைப் பொருள்கள் – கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர்ச்சி அடைவதே, திராவிட மாடல் வளர்ச்சி என அவர் தெரிவித்தார். அத்தகையை திராவிட மாடல் வளர்ச்சியை அடைய தேவையான வழிகாட்டுதல்கள் தேவை என்றும் மாநில திட்டக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.