மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோர் கொலை!

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோரை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகேயுள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரைசாமி…

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோரை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகேயுள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் இவரது மனைவி கோசலை. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். துரைசாமிக்கு அதே பகுதியில், 10 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில், அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று துரைசாமி மற்றும் மனைவி கோசலை ஆகியோர் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இது குறித்து அவரது மகன் ஆனந்தன் தனது தாய் மற்றும் தந்தை இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ததில், இறந்த இரண்டு பேரின் கழுத்தும் நெறிக்கப்பட்டதால் இறந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில் துரைசாமிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 2.5 ஏக்கரை மட்டும் அவரின் 3 மகள்களுக்கு பிரித்துக்கொடுத்துள்ளார். மேலும் மீதமுள்ள 7.5 ஏக்கர் நிலத்தை தனது மகன் ஆனந்தன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் முழு சொத்தையும் தனது பெயரில் எழுதி வைக்கவில்லை என ஆத்திரமடைந்த ஆனந்தன், அவரது மனைவி மற்றும் மகன்கள் ஆகியோர் துரைசாமி மற்றும் கோசலையை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவர்களின் வாயில் பூச்சிகொல்லி மருந்தை ஊற்றி உயிரை மாய்த்துக் கொண்டதாக நடகமாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1989ம் ஆண்டே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டுன் என தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியும், இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறுவது சமூக பின்னடைவையே காட்டுவதாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.