தமிழ்நாட்டிற்கு 33.9 டிஎம்சி தண்ணீர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தம் 33.9 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12ஆவது கூட்டம், ஆணைய…

மிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தம் 33.9 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12ஆவது கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார் தலைமையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னையில் இருந்து தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சட்ட விரோதமாக காவிரி நீரை சிறு, சிறு வாய்கால்கள் மூலம் திசை திருப்பி, கர்நாடக அரசு பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக, தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மேகதாது அணையை கட்ட, கர்நாடக அரசு முயற்சி செய்து வருவதற்கும், தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அலுவலகம், ஒழுங்காற்று குழுவுக்கான அலுவலகம் மற்றும் அதற்கான உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்தும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர், மற்றும் ஜூலை மாதத்திற்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.