தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய்யும் நடிகை திரிஷாவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இது பல்வேறு தளங்களில் பேசுபெருளானது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், திரிஷாவின் புகைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ”குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கறது கொஞ்சம் நல்லதுங்க, வெளிய வராம பாத்துக்கங்க. அதுனால நிறைய பிரச்சனைகள் உண்டாகாம பாத்துக்கலாம்” என பார்த்திபன் கூறியிருந்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் நடிகை திரிஷா, ”அறிவில்லாமல் பேசப்படும் தரமற்ற வார்த்தைகள், அவை யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவர்களை விட, அந்தப் பேச்சாளரைப் பற்றித் தான் அதிகம் வெளிப்படுத்தும்.” என்று மறைமுகமாக இயக்குநர் பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
திரிஷாவின் பதிவு வந்த சிறிது நேரத்திற்குள் நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் இடம் பெற்றுள்ள வீடியோவில் பார்த்திபன் தானே பேசி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் “ சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறி விடுகின்றன. விருது விழாவில் ரேபிட் ஃபயர் (Rapid Fire) போல கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்குச் சற்றும் யோசிக்காமல் டான் டான் என பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், திரிஷா அவர்களின் போட்டோ திரையில் வந்ததும் என்ன சொல்வது என யோசிக்கையில், ‘குந்தவை குந்தவை’ என குரல் எழுப்பினர். உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே ‘குந்தவையை வீட்டிலேயே குந்தவைக்கவும் பிரச்சனை வராமல் இருக்க’ எனக் கூற, அரங்கமே கைதட்டியது, பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.
இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் ‘குந்தவையைத் தவிர்த்திருக்கலாம்’ என்றார். உடனே நிகழ்ச்சியாளர் அருணா அவர்களிடம் அதை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காக நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்குச் செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண் பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு, சுதந்திரத்தைக் கைபிடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான். எனவே பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்கசக்தி” இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.







