அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூகநீதி திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறிப்பிட்டார்.
அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் விரிவாக விளக்கமாக பேசியுள்ளார். இதனால் இது குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை என்றும் கூறினார். “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க வேண்டும்” என்று தான் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அதை இப்போது நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் முயற்சிப்பதாகவும், யாரையும் பணியில் இருந்து விடுவித்து பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அப்படி யாரையேனும் விடுவித்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்துடன் புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.







