பெகாசஸ் விவகாரம் குறித்து விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்றத்திலும் இதன்பாதிப்பு எதிரொளித்தது. எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வளியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை, மாநிலங்களவைகள் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. பெகாசஸ் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணையின் போது மத்திய அரசு மனுதாரர்கள் அளித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இரண்டு பக்கம் கொண்ட பதில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், பெகாசஸ் விவகாரத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீது விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு பக்கம் கொண்ட மத்திய அரசின் பதில் மனுவில் உள்ள விவரங்கள் போதுமானதாக இல்லை என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், விரிவான பதில் மனுவை மத்திய அரசு 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.







