11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக ஆட்சி காலத்தில்தான் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், அந்த புதிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரடியாக ஆய்வு செய்துள்ளதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், டெல்லி சென்று ஒவ்வொரு கல்லூரியிலும் 150 மாணவர்கள் என்ற விகிதத்தில் 1,650 மாணவர்களை சேர்க்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், மாணவர் சேர்க்கைக்கு விரைவில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கும் என்றும், இந்த ஆண்டே 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும்
மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







