ராணுவ வீரர் கொலை சம்பவம்: கிருஷ்ணகிரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (50). தி.மு.க.வைச் சேர்ந்த இவர்…

ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச்
சேர்ந்தவர் சின்னசாமி (50). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி
ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (33),
அவரின் தம்பி பிரபு (29), ராணுவ வீரர்கள். பிரபாகரன் கடந்த 8ஆம் தேதி அதே பகுதியில்
உள்ள சின்டெக்ஸ் தொட்டியின் அருகில் துணி துவைத்துள்ளார். இதை கவுன்சிலர்
சின்னசாமி கண்டித்ததால் வாய் தகராறு ஏற்பட்டது. அன்று மாலை தி.மு.க.,
கவுன்சிலர் சின்னசாமி, 10க்கும் மேற்பட்டோருடன் சென்று ராணுவ வீரர்கள்
பிரபாகரன், பிரபு ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒசூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பிரபு
நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். நாகரசம்பட்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த தி.மு.க., கவுன்சிலர் சின்னசாமி (50),
அவரது மகன்கள் ராஜபாண்டி (30), குரசூரியமூர்த்தி (27), குணநிதி (19), புலிபாண்டி (22), மற்றும் கவுன்சிலரின் உறவினர்களான மணிகண்டன் (60), வேடியப்பன் (54), சின்னசாமி (60), காளியப்பன் (50) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் வேலம்பட்டி பேருந்து
நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர்
சிவபிரகாஷ் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக ராணுவ வீரரின் வீட்டிற்கு சென்று பிரபு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பாஜக
செய்யும் என உறுதி அளித்துவிட்டு வந்தனர். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ
வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.