தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வாக்காளர்களிடம் விசாரணை நடத்தினோம்.
அண்மைச் செய்தி: திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 1 மணி வரை 51.35% வாக்குகள் பதிவு
இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நேற்று கூட தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் குறித்து தான் வீடியோ கான்பிரஸ் மீட்டிங் நடந்தது, விதிமுறைகள் மீறியது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.48.6 லட்சம் வரை பணம் பிடிக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.







