தீரன் பட பாணியில், தனியாக இருந்த வீட்டில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கார்த்தி நடித்த தீரன் படத்தில், வட இந்திய கொள்ளையர்கள், தனியாக இருக்கும் வீட்டை குறி வைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு உரிமையாளர்களை கொல்வது அவர்கள் வழக்கம். அதே போன்ற சம்பவம் அரக்கோணம் அருகிலும் நடந்திருப்பது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அடுத்த அவினாசி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் புஷ்கரன்(25). இவர், கிராமத்திற்கு வெளியே தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே வீடுகட்டி வசித்து வருகிறார். தனது தாய் சுதா (52), பெரியம்மா லதா (57), பாட்டி ரஞ்சிதம்மாள்(76) ஆகியோரும் அவருடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறக்க முயன்றார் புஷ்கரன். சந்தேகம் அடைந்து ’யார்?’ என்று கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். அப்போது நாட்டு துப்பாக்கியால் அவர்கள் சுட்டதில் புஷ்கரன் உட்பட நான்குபேரும் படுகாயமடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த 3 முகமூடி அணிந்த கொள்ளையர்கள், பெண்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பினர்.

இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து புஷ்கரன் உள்ளிட்டோரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.








