இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் கடலில் தூக்கி வீசப்பட்டதா? 3வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்ட நிலையில், உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடலுக்கு அடியில் மூன்றாவது நாளாக தங்கம் தேடுதல் வேட்டை…

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்ட நிலையில், உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடலுக்கு அடியில் மூன்றாவது நாளாக தங்கம் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

இலங்கையில் இருந்து மீண்டும் கடத்தல் தங்கம் வர இருப்பதாக கடந்த 5 ஆம் தேதி சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சுங்கத்துறையினர் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பாம்பன் மண்டபம் வேதாளை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரைப் பகுதியில் ஒரு படகு கரையை நோக்கி வந்ததை கண்ட சுங்கத்துறையினர் அந்த படகை விரட்டி பிடிக்க முயற்சித்தனர். அப்போது படகில் இருந்த இரண்டு பேர் ஒரு டிராவல் பேக்கை படகில் வீசி எறிந்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதன் பிறகு படகை சுற்றி வளைத்த சுங்கத் துறையினர், இலங்கையிலிருந்து மீண்டும் கடத்தி வரப்பட்ட ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து சுங்கத்துறையினர் படகை பறிமுதல் செய்த போது, தப்பி ஓடியவர்கள் கடலில் மேலும் ஏதேனும் தங்கத்தை விட்டுச்சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துகுளிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை ஸ்கூபா வீரர்கள் கொண்ட 20க்கும் மேற்பட்ட குழுவினரை வைத்து கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடலுக்கு அடியில் மூன்றாவது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 17 கோடி மதிப்பிலான 32 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலாணாய்வுத்துறை, சுங்கத்துறை மற்றும் இந்தியகடலோர காவல் படையினர் கூட்டாக பறிமுதல் செய்த நிலையில் மீண்டும் 2.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்ததோடு, தற்போது மீண்டும் கடலில் தங்கம் வீசப்பட்டிருக்கலாம் என்றகோணத்தில் மூன்றாவது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.