கொல்கத்தாவில் ஸ்மார்ட் போன் விளையாட்டு செயலி மூலம் மோசடி செய்த ரூ.17 கோடியை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.
ஸ்மார்ட் போன்களில் உள்ள ஒரு விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை இயக்குனரகம் கொல்கத்தாவில் 6 இடங்களில் சோதனை நடத்தியது.
இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியை கொண்டு ஏமாற்றியதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட அமீர் கான் மற்றும் பலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி எம் எல் ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள தொழிலதிபர் அமீர் கானின் வளாகத்தில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு நேற்று சோதனை நடத்தியது. இதில் ரூ.7 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனையின் போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனை இன்னும் தொடர்கிறது. தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு, பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தொழிலதிபரின் வீட்டை சுற்றி அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆரம்ப காலத்தில், இந்த செயலில் முதலில் பயனாளர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டது. இது பயனர்களிடையே ஆரம்ப நம்பிக்கையை அளித்தது. மேலும் அவர்கள் அதிக சதவீத கமிஷன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்களுக்கு பெரிய தொகையை முதலீடு செய்யத் தொடங்கினர். பொதுமக்களிடமிருந்து கணிசமான தொகையை வசூலித்த பிறகு, திடீரென்று, அந்த செயலியிலில் அப்டேட் செய்யப்போவதாக கூறி திரும்பப் பெறுவது, ஏதாவது ஒரு சாக்குப்போக்கால் நிறுத்தப்பட்டது.
பின்னர் அந்த குறிப்பிட்ட ஆப் சர்வர்களில் இருந்து சுயவிவரத் தகவல் உட்பட அனைத்துத் தரவுகளும் அழிக்கப்பட்டது. அதன் பிறகு தான் பயனர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை புரிந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும் மொத்தம் ரூ.17 கோடி பணத்தை கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








