இந்திய பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்தார். மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர், ஹவுரா மற்றும் குவஹாத்தி இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ”வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இன்று முதல் இந்தியாவில் தொடங்கப்படுகின்றன. வரும் காலங்களில், இந்த நவீன ரயில் சேவையானது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இன்று, இந்திய ரயில்வே நவீனமயமாகி வருவது மட்டுமல்லாமல், தற்சார்பு பெற்றதாகவும் மாறி வருகிறது. இந்தியாவின் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரோ பெட்டிகள் இந்தியத் தொழில்நுட்பத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. தற்போது, நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட அதிக இன்ஜின்களை உற்பத்தி செய்கிறோம்” என்றார்.








